இந்திய மொழியின் எண்களும் இலக்க முறைகளும் தமிழ் மூலத்தைக் கொண்டவைகளே, இவைகளைப் பற்றியெல்லாம் அறிந்திராத மேலைநாட்டவர், எண்களைக் கண்டுபிடித்தவர் ஆரியர்களே என நம்பினர். அக்கூற்று எவ்வாறு பொய்யானது என்பதை அடுத்து எண்களைப் பற்றிய விளக்கங்களால் தெரிந்து தெளிவு அடைவோம்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தரும் என்பர். அறிவியலின் தொடக்கம் தான் எண்ணியல். குறிஞ்சி நில மக்கள், முல்லை நிலத்துக்குக் குடிபெயர்ந்தனர். அடர்ந்த புல்வெளியில் தங்களது ஆனிரை வளர்க்கத் தொடங்கிய ஆயர்குல மக்கள், தங்கள் ஆடுமாடுகளின் எண்ணிக்கையைக் கூட அறிந்திருக்கவில்லை. விலங்குளால் அடித்துக் கொல்லப்பட்ட கால்நடைகள் எத்தனையென்பதை அவர்களால் அறிய இயலவில்லை. இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்.